விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சென்னையில் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம்
சென்னை: விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டு மல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று காலை மெரினா கடற்கரை, உழைப் பாளர் சிலை அருகில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தலைமையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்து விளக்கப்பட்டது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அங்கு நடைபெற்ற கையெழுத்து முகாமில், ஹெல் மெட் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி ஏற்று, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கையெழுத்திட்டனர்.
மேலும், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளைக் கூறி, இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாம் 5 நாட்கள், 5 முக்கிய சிக்னல் சந்திப்புகளில் நடத்தப்பட உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், துணை ஆணையர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வழக்குப் பதிவு
கடந்த 23.05.2022 முதல் 05.07.2022 வரையில் சென்னை பெருநகரில் போக்குவரத்து போலீஸாரின் தீவிர வாகன சோதனையில், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 72,744 வாகன ஓட்டிகள் மீதும், பின்னிருக்கையில் ஹெல்மெட் அணியாமல் வந்த 63,912 நபர்கள் மீதும் என மொத்தம் 1,36,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 36 லட்சத்து 65,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
