

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்படுத்திய 8 ஒப்பந்ததாரர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 ஆயிரத்து 70 கோடியில் 1,033 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப் பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணிகளை மேற்கொண்டு வரும் 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.