

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த அதிமுக, தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ச்சியாக 2 வது முறையாக ஆட்சி அமைத்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் மற்றும் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்நிகழ்வின் 10 முக்கியத் துளிகள்:
* போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்குக்கு வரும்போது சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
* திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் பதவியேற்பு விழாவைக் காண மெரினா கடற்கரையில் குவிந்தனர். நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்புக்காகவும் சுமார் 2500 போலீஸார் குவிக்கப்பட்டனர்.
* சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன் ஜெயலலிதா வழக்கத்துக்கு மாறாக, புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
* பதவியேற்பு விழாவின் தொடக்கமாக நாட்டுப் பண் சுருக்கமாக இசைக்கப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பதவியேற்பு விழா மேடையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள 28 அமைச்சர்களையும் ஜெயலலிதா, ஆளுநரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
* அதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா திங்கட்கிழமை பதவியேற்றார். முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு உறுதிமொழி, ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்தார்.
* முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகிய 14 பேரும் கூட்டாக அமைச்சர்களாக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர். அடுத்ததாக கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலட்சுமி, மருத்துவர்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி உள்ளிட்ட 14 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர்.
* முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். அவருடன்திமுக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, சேகர்பாபு, வாகை.சந்திரசேகர், மா.சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் விவரம்: >ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
* ஜெயலலிதா பதவியேற்பு விழாவை தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பார்க்கும் வகையில், தமிழக செய்தித்துறையின் பிரச்சார வாகனங்கள் மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் நிறுத்தப்பட்டு, அதில் உள்ள டிஜிட்டல் திரையில் திரையிடப்பட்டது.
* பதவியேற்பு விழா நடக்கும் சென்னை பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள வாலாஜா சாலை, காமராஜர் சாலையில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டன. இது தவிர, முதல்வர் வரும் பகுதிகளில், கட்சியினர் திரண்டு வரவேற்கக்கூடும் என்பதால், சாலை ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
* பதவியேற்பு விழா வைபவத்தில் வழக்கமாக இருக்கும் தோரணங்கள், பேனர்கள், கட்- அவுட்கள் என எதுவும் இல்லாமல், தடுப்பு வேலிகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
* பதவியேற்பு விழாவுக்குப் பிறகு வாலாஜா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் சில மணிநேரம் அவதிப்பட்டனர்.
முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா தலைமைச்செயலகம் சென்றார். முதல்வருக்கு அரசு அதிகாரிகள் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். தலைமைச்செயலகத்தில் 5 அரசு கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதன் விவரம்:>முதல்வர் ஜெயலலிதாவின் முதல் கையெழுத்து: விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் பணி நேர குறைப்புடன் 500 மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகை