Published : 07 Jul 2022 07:38 AM
Last Updated : 07 Jul 2022 07:38 AM

ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு அரசு நிலங்களை பாதுகாப்பது எப்படி? - மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை செயலர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பாதுகாப்பதற்காக ரூ.50 கோடி சிறப்பு நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களுடன் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக அரசு நீர்நிலைகள் உள்ளிட்ட அனைத்து அரசு நிலங்களையும் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தற்போது சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கப்படுகிறது” என அறிவித்தார்.

இதையடுத்து, தற்போது, அரசு நிலங்கள் மீட்பு மற்றும் பாதுகாப்பு நிதியாக 50 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, இந்த நிதியை பயன்படுத்துவது, அரசு நிலங்கள் மீட்பு, பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

வழிகாட்டுதல்கள்

தமிழக அரசின் வருவாய்த் துறையானது அரசு நிலங்களை பாதுகாக்கும் அமைப்பாகும். ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்பதுடன், தொடர்ந்துஆக்கிரமிப்புகள் நிகழாமலும் கண்காணிக்கிறது. ஆக்கிரமிப்பில்லாத அரசு நிலம் என்பதே அரசின் கொள்கையாகும். நீதிமன்றமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மதிப்பு மிக்க அரசு நிலங்களை மீட்க வேண்டும் என்பதை அக்கறையுடன் பார்க்கிறது. இதற்காக அரசு நிலங்கள் மீட்பு மற்றும் பாதுகாப்பு நிதி பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிதி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காகவும், அவற்றைஉரிய வேலி அமைத்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புறம், புறநகர், புறநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில் நில மதிப்பும், ஆக்கிரமிப்புக்கான சாத்தியமும் அதிகம். அதே போல், சமீபத்தில் மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புக்கான சாத்தியமுள்ள இடங்கள், எதிர்காலத்தில் ஆக்கிரமிக்கப்படலாம் என கருதப்படும் தற்போதைய காலியிடங்கள், குத்தகையில் இருந்து மீட்கப்பட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

குறிப்பாக புறம்போக்கு நிலங்கள், அனாதீனம், நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வரும் உபரி நிலங்கள், நத்தம் காலியிடங்கள், நீர்நிலைகளான குளம், குட்டை உள்ளிட்ட ஆட்சேபகரமான, ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்கள், மேய்க்கால் நிலங்கள் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படலாம்.

இதில் தோப்பு, மயானம் உள்ளிட்டவை கிராம ஊராட்சிகளால் பாதுகாக்கப்பட வேண்டும்.

கோயில்களி்ன் பட்டா நிலங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் ஆகியவற்றின் நிலங்கள் அந்தந்த நிறுவனங்களின் நிதியின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். மிகப் பெரிய நீர்நிலைகள், சிறுபாசன ஏரிகள் ஆகியவை நீர்வளத்துறை நிதி மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவை தவிர்த்த நீர்நிலைகள், நகர்ப்புற பகுதிகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேறு நிதி ஆதாரம் இல்லாவிட்டால், இந்த சிறப்பு நிதியைபயன்படுத்தலாம். அதே நேரம்,சுற்றுச்சுவர் கட்டுதல், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளுக்கு வேலி அமைத்தல் ஆகியவற்றுக்கு இந்த நிதியை பயன்படுத்தக் கூடாது.

இந்த நிதியை பொறுத்தவரை, நில நிர்வாக ஆணையர் மாவட்டங்கள், தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் அடிப்படையில் ஒதுக்கலாம். இந்த திட்டத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் நில நிர்வாக ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்படும் நேரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x