Published : 19 May 2016 07:46 PM
Last Updated : 19 May 2016 07:46 PM

திரைக் கலைஞர்களில் கருணாஸ், வாகை.சந்திரசேகர் மட்டுமே வெற்றி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், சி.ஆர்.சரஸ்வதி தோல்வியடைந்து இருக்கிறார்கள். முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பதிவான வாக்குகளில் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாலை 5 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 131 தொகுதிகளிலும் திமுக 100 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் திமுக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

விஜயகாந்த், சரத்குமார் அதிர்ச்சி தோல்வி

இத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்துக்கு 26,965 வாக்குகளே கிடைத்தது. அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட குமரகுரு வெற்றி பெற்றிருக்கிறார்.

அதிமுகவில் இணைந்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்துள்ளார். 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் சரத்குமார் தோல்வி அடைந்தார்.

பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.ஆர்.சரஸ்வதி, திமுக வேட்பாளர் கருணாநிதியிடம் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறார்.

வெற்றியடைந்த கருணாஸ்

திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றியடைந்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திவாரகனை விட 8,696 அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் கருணாஸ். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக பதிவி வகித்து வருபவர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வேளச்சேரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வாகை.சந்திரசேகர் 8,872 வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முனுசாமியை தோற்கடித்திருக்கிறார். இதே தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கிட்டி 2,477 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

நடிகர் சங்கம் வாழ்த்து

தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறது. மேலும், திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் துணைத்தலைவர் கருணாஸுக்கும் தங்களது வாழ்த்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x