சிறார் திரைப்பட விழாவுக்கு 13,000 அரசுப் பள்ளிகள் தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறார் திரைப்பட விழாவுக்கு 13,000 அரசுப் பள்ளிகள் தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: சிறார் திரைப்பட விழாவுக்காக, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,000 பள்ளிகளை தேர்வு செய்துள்ளதாகவும், திரைப்படம் திரையிடுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் அவர் கூறியது: "இதுபோன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டு,மாணவர்களின் கருத்துகளை உள்வாங்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதுவொரு வெற்றிகரமான முயற்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரம் பள்ளிகளை தேர்வு செய்துள்ளோம். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திரைப்படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களை திரையிடுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சியளிக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுவார்கள்.

திரைப்படங்களைப் பார்த்த பின்னர், மாணவர்களிடமிருந்து வரும் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் விமர்சனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். திரைத்துறை சார்ந்த ஜாம்பாவன்களுடன், கிராமப்புற, நகர்ப்புறங்களில் இருந்து வருகின்ற தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்துரையாடுவார்கள்.

இந்த உரையாடல் முடிந்தபின்னர், அதில் சிறந்த விமர்சனமாக எதை தேர்வு செய்கிறோமோ, அதிலிருந்து ஒரு 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in