Published : 06 Jul 2022 09:10 AM
Last Updated : 06 Jul 2022 09:10 AM

பெண்ணிடம் அத்துமீறல்: தட்டிக்கேட்டதால் பழநி அருகே நரிக்குறவர்கள் மீது கும்பல் தாக்குதல்

பழநி அருகே நரிக்குறவ சமூகப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றதைத் தட்டிக்கேட்டதால் கும்பல் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் காய மடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பெத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு வசிக்கும் இளம்பெண் ஒருவர் நேற்று மாலை கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது சிலர் அவரிடம் அத்துமீறி நடக்க முயன்றனர்.

இதைப் பெண்ணின் உறவினர்கள் தட்டிக் கேட்டபோது நரிக்குறவர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை கும்பல் பயங் கரமாக தாக்கியது. இதில் காயமடைந்த நரிக்குறவர்கள் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே, தங்கள் சமூகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி நரிக்குறவர்கள் நேற்று பழநி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அரசு வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீஸாரிடம் புகார்

பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் சமூகத்தினர் கூறியதாவது:

தங்கள் சமூகப் பெண்களிடம் தவறாக நடக்கும் நபர்கள் குறித்து பலமுறை போலீஸாரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மோதல் சம்பவம் நடந்திருக்காது. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விடுவோம். மேலும், இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம், என்றனர். இதையடுத்து போலீஸார் பெத்துநாயக்கன்பட்டியில் ரோந்து செல்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நரிக்குறவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x