

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்தது.
மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகளின்றி புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தடையை நீக்கக் கோரி போக்குவரத்து துறைசெயலர் தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 242 பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது மொத்த கொள்முதலில் 37 சதவீதமாகும்.
தொழில்நுட்பக் குழு பரிந்துரைப்படி, சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்களையும் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இந்த புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதங்களில் புதிய பேருந்துகள் மற்றும் மின்கலப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
கொள்முதல் செய்யப்படும் புதியபேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள்இடம்பெறும்’’ என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு, ‘‘மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முழுமையாக பின்பற்றி 2,213 புதிய பேருந்துகள், 500 மின்கலப் பேருந்துகளை கொள்முதல் செய்யலாம்’ என்ற நிபந்தனையுடன் போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதியளித்து, தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.