

திருநெல்வேலி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணி, கோயில் யானை காந்திமதிக்காக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் கருமாரி தெப்பக்குளம் புனரமைப்பு பணி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர், அமைச்சர் கூறியதாவது:
நெல்லையப்பர் கோயிலில் தலவிருட்சமான மூங்கில் அமைந்துள்ள இடத்தில் புதிய கல் கட்டுமானப் பணி நிறைவு பெற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கோயிலில் மூலிகை தைலம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.4 கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டங்களை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். இங்கு திருவிழாக் காலங்களில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுஉள்ளது. இக்கோயிலில் துணை ஆணையர் நியமிக்கப்படுவார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் வரும் ஆவணி மாதத்தில் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 1,500 கோயில்கள் ரூ. 1,000 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். அதன்படி பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் திருப்பணிகள் நடைபெறாத கோயில்களே இல்லாத நிலை உருவாக்கப்படும்.
கரோனா பரவல் முதல் கட்டத்தில்தான் உள்ளது. எனவே, கோயில்களில் திருவிழாக்கள் நடத்த எந்த பிரச்சினையும் இருக்காது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.