

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் நாகப்பட்டினத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படும்போது, அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முடித்துக்கொள்கிறார். மத்திய அரசும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எந்த அழுத்தமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது” என்றார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெ.ஜீவ குமாரை ஆதரித்து அவர் பேசியது:
மத்தியில் ஆளும் மோடி அரசால் மக்கள் எந்தப் பலனும் அடையவில்லை. மோடி ஆட்சியில் முதலாளிகளுக்குக் காட்டப்படும் தாராளம், விவசாயிகளுக்குக் காட்டப்படுவதில்லை. திமுகவினர் மீது 2ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. அதனால்தான் இரு கட்சிகளும் மோடி அரசை எதிர்த்துப் பேசாமல் மவுனம் காக்கின்றன.
தமிழக மக்களின் நலனை முன் னெடுத்துச் செல்ல, தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் உருவாக மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள் என்றார்.