

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை வந்தார்.
அன்றைய தினம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து யஷ்வந்த் சின்ஹாவை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதில், காங்கிரஸ் எம்பியான விஜய் வசந்த்தும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது, விஜய் வசந்தின் விலை உயர்ந்த பேனா மாயமாகி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1.50 லட்சம் என கூறப்படுகிறது. அதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காணாமல் போன பேனா விஜய் வசந்தின் தந்தையும், கன்னியாகுமரி முன்னாள் எம்பியுமான வசந்தகுமார் பயன்படுத்தியது என்று கூறப்படுகிறது. தந்தை இறந்த பிறகு அதே தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் தந்தையின் நினைவாக அந்த பேனாவை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில்தான் விலை உயர்ந்த அந்த பேனா மாயமாகி உள்ளது. பேனா காணாமல் போயிருப்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக பேனா மாயமான நட்சத்திர ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.