

சென்னை: மக்களுக்கான திட்டங்களுக்காக கால அட்டவணை வகுக்கும் தமிழக அரசு அதை குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்துவதில்லை என மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான அவமதிப்பு வழக்கில் அதிருப்தி தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட துறைச் செயலர்கள் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதிகளை ஏற்படுத்தக் கோரி அய்யம்பெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம் சார்பில் ரூ.160 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதையேற்ற உயர் நீதிமன்றம், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை 2020 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019 ஜூலையில் உத்தரவிட்டது. ஆனால், அதன்படி பணிகள் நடக்கவில்லை எனக் கூறி அய்யம்பெருமாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்தை முடிக்க மேலும் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், மக்களுக்கான திட்டங்களுக்காக கால அட்டவணை வகுக்கும் தமிழக அரசு, அதை குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர். இந்த வழக்கில் இந்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கிறோம் என தமிழக அரசுதான் ஒப்புக்கொண்டது.
எந்தவொரு காலக்கெடுவையும் நீதிமன்றமே விதிக்கவில்லை. தற்போது மீண்டும் கால அவகாசம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்தாலும் அதையும் அதிகாரிகள் செயல்படுத்துவதில்லை. இதற்கு அந்தந்த துறைச் செயலர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த வழக்கை நாளைக்கு (ஜூலை 7) தள்ளி வைக்கிறோம். அப்போது சம்பந்தப்பட்ட துறைச் செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொருத்தமட்டில் இனி யாருக்கும் தயவு காட்ட முடியாது என எச்சரித்து விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.