Published : 06 Jul 2022 06:16 AM
Last Updated : 06 Jul 2022 06:16 AM
சென்னை: நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நூற்றாண்டுகள் கடந்த பழமையான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) முன்னாள் தலைவர்கள் எம்.ராகவன், கே.அழகிரிசாமி, குமார் ராஜரத்தினம் ஆகியோரது புகைப்படங்கள் திறப்பு விழா மற்றும் ‘நீதித் துறையில் சமீபத்திய சீர்திருத்தங்கள் - ஓர் உலகளாவிய பார்வை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன.
சங்க முன்னாள் தலைவர்களின் புகைப்படங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசும்போது, “கரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் தற்போதைய சூழலில் அந்த ஊசி கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
கீழமை நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை இருக்கும் தலையாய பிரச்சினை வழக்குகளின் நீண்டகால நிலுவை. பல ஆண்டுகள் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது வழக்காடிகளும் பாதிக்கப்படுவதுடன், ஒட்டுமொத்த நீதித் துறையும் நிலுவை வழக்குகளின் சுமையால் பாதிக்கப்படுகிறது.
இந்த சுமையைக் குறைக்க லோக் - அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை அடிக்கடி நடத்த வேண்டும். குறிப்பாக நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் எம்பிஏ சங்கத் தலைவர் வழக்கறிஞர் வி.ஆர்.கமலநாதன் வரவேற்றார். செயலாளர் வழக்கறிஞர் டி.சீனிவாசன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT