

சென்னை: அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் முகக் கவசம் அணிந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளுக்கு ரூ.1.30 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர், கண்ணகி நகர் நகர்ப்புற சமுதாய நல மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 அக்.23-ம் தேதி இப்பகுதியில் ஆய்வு செய்தபோது, மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இப்பணியை நிறைவேற்றித் தந்துள்ளார்.
ஓஎம்ஆர் சாலையில் இருந்துபுதிதாக பிரதான குடிநீர் குழாய்இணைக்கப்பட்டு எழில் நகரில்6,000 வீடுகள், சுனாமி குடியிருப்பில் 2,000 வீடுகளுக்கு புதிதாக கூடுதல் குடிநீர் தரும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் 39 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்காலை சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் தற்போது நேரடியாக சென்று மக்களை சந்தித்தார். அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள குளோரின் அளவு ஆய்வு செய்யப்பட்டது.
சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் வயிற்றுப்போக்கு, வாந்திக்கு தேவையான மருந்து,மாத்திரைகள் போதிய அளவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
உலகில் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிஏ4, பிஏ5 வகை ஒமைக்ரான் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடுவதும், முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவிதிமுறைகளை பின்பற்றுவதும்தான் இதில் இருந்து மீள ஒரே வழி.
தமிழகத்தில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் வரும் 10-ம் தேதி நடக்க உள்ளது. இதில், முதல், 2-வது, பூஸ்டர் தவணை போட்டுக் கொள்ளாத 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்டவர்கள் கூடும் இடத்தில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
அரசியல் நிகழ்வுகளிலும் இதை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.