Published : 02 May 2016 04:51 PM
Last Updated : 02 May 2016 04:51 PM

திமுக- காங். கூட்டணி எந்த அடிப்படையில் ஊழல் அணி?- ஜெ.-க்கு ஈவிகேஎஸ் கேள்வி

கோவை பிரச்சாரக் கூட்டத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஊழல் கூட்டணி என்றார் ஜெயலலிதா, எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறுகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெயலலிதா, 'தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணி, ஓட்டுக் கேட்டு வரும்போது விரட்டி அடியுங்கள்" என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார். தமது சுற்றுப்பயணத்தில் காசு கொடுத்து வலுக்கட்டாயமாக கூட்டி வரப்பட்ட கூட்டத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்து வருகிறார். இவரது குற்றச்சாட்டைப் பார்க்கிறபோது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதுபோல இருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்திற்கு படை பரிவாரங்களோடு முதலமைச்சராக சென்ற ஜெயலலிதா, உடன்பிறவா தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் அளித்து நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பு வழங்கினார். அங்கேயே கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவிலேயே இத்தகைய இழிநிலை எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஊழல் வழக்கு காரணமாக இருமுறை முதலமைச்சர் பதவியை இழந்தவரும் ஜெயலலிதாதான்.

இத்தகைய பின்னணி கொண்ட ஜெயலலிதா தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஊழல் கூட்டணி என்று சொல்வதற்கு என்ன அடிப்படை ஆதாரம் இருக்கிறது ? ஜெயலலிதாவைப் போல எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கில் அன்னை சோனியா காந்தி தண்டிக்கப்பட்டிருக்கிறாரா ? இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கு இளந்தலைவர் ராகுல்காந்தி மீது இருக்கிறதா ? ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த முதுபெரும் தலைவர் கலைஞர் மீது எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கு நடைபெற்று ஜெயலலிதாவைப் போல தண்டிக்கப்பட்டிருக்கிறாரா ? தி.மு. கழகத்தின் பொருளாளராக இருக்கிற தளபதி மு.க. ஸ்டாலின் எங்கேயாவது ஊழல் வழக்கை எதிர்கொள்கிறாரா ? எந்த அடிப்படையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஊழல் கூட்டணி என்று ஜெயலலிதா சொல்கிறார் ?

2ஜி வழக்கைப் பொறுத்தவரை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களேதவிர, குற்றவாளிகள் அல்ல. அவர்கள்மீது எந்த நீதிமன்றமும் இதுவரை எந்த தண்டனையும் வழங்கியதில்லை. ஊழலில் ஊறித் திளைத்த ஜெயலலிதா ஊழலைப் பற்றி பேசலாமா ?

ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைப் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக 25 ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆளுநர் ரோசையாவிடம் 2.5.2015 அன்று ஆதாரங்களோடு வழங்கப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை ஜெயலலிதாவோ, குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களோ இதுவரை எந்த பதிலும் சொன்னதில்லை. எதையும் மறுக்க முடியாத காரணத்தால் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மடியில் கணம் இருந்த காரணத்தால் பதுங்கிக் கொண்டதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஊழல் நடவடிக்கைக்கு துணைபோகாத நேர்மையான அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் ? மின்கொள்முதலில் ஊழல், கோக்கோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல், உயர்கல்வித்துறையில் ஊழல், ஆவின்பால் கலப்பட ஊழல், லேப்டாப் ஊழல், நெடுஞ்சாலைத்துறை, பாதாள சாக்கடை ஊழல், டாஸ்மாக் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிற அளவுக்கு ஜெயலலிதாவின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றதை எவராவது மறக்க முடியுமா ? கண்ணாடி வீட்டிலிருந்துக் கொண்டு கல்லெறிவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மதுபானங்கள் கொள்முதல் செய்வதில் ஜெயலலிதாவுக்கு கிடைக்கிற ஆதாயத்தின் காரணமாகவே மதுவிலக்கை கொண்டுவர தயாராக இல்லை. ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கமான மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரி மூலமாக டாஸ்மாக் நிறுவனம் 2011-12 இல் ரூ.1,404 கோடியும், 2012-13 இல் ரூ.1,729 கோடியும், 2013-14 இல் ரூ.2.280 கோடியும் மதுபானங்கள் கொள்முதல் செய்வது ஆண்டுக்கு ஆண்டு கூட்டி கொள்ளை அடித்ததை மறுக்க முடியுமா ?

எனவே, குளுகுளு வசதியோடு மேடையில் அமர்ந்து கொண்டு கடும் வெயிலில் மக்களை அமரவைத்து ஊருக்கு உபதேசம் செய்யும் ஜெயலலிதாவுக்கு உரிய பாடத்தை தமிழக மக்கள் வழங்குகிற நேரம் நெருங்கிவிட்டது. ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஊழல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு கலைஞர் தலைமையில் நல்லாட்சி அமையப் போவது உறுதி.

இவ்வாறு கூறியுள்ளார் இளங்கோவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x