

பெண்களுக்கு மொபட் வாங்க 50 சதவீத மானிய திட்டத்தை செயல்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி தேவை. இதை ஜெயலலிதா ஒதுக்க முடியுமா என திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.
மதுரை மாவட்டம் மேலூர், ஒத்தக்கடை, மதுரை கிழக்கு, மத்திய, வடக்கு, மேற்குத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று பேசியது:
கருணாநிதி மட்டுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். 5 ஆண்டுகளில் குடும்ப அட்டையைக்கூட மாற்றித்தராத ஜெயலலிதாவால் இலவச கைபேசி வழங்க சாத்தியமே இல்லை. திமுக ஆட்சி அமைந்தால் விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்படும். பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் மொபட் வழங்க வேண்டுமானால் 3 கோடி பெண்களுக்கு ரூ.60 ஆயிரம் கோடி தேவை. இதை வழங்கினால் கல்வி, மின்சாரம், சுகாதாரம் என எந்த துறையையும் செயல்படுத்த நிதி இருக்காது. இதிலிருந்து ஜெயலலிதா ஏமாற்றுகிறார் என்பது தெரிகிறது.
காவல் மற்றும் அரசுத் துறைகளில் அதிமுகவினர் தலையீடு அதிகம் இருந்தது. ஜெயலலிதாவின் மோசமான நிர்வாகத்தால் சட்டம்-ஒழுங்கு, தொழில், வேலைவாய்ப்பு என தமிழகம் அனைத்திலும் முடங்கிப்போயுள்ளது. இந்நிலை மாற திமுக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்றார்.