Published : 05 Jul 2022 07:31 PM
Last Updated : 05 Jul 2022 07:31 PM
சென்னை: அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என்றும், இதில் சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அயல் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்:
மிஸ்டர் பீன் தெரியாத குழந்தைகள்
உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்குத் தெரிந்த ஒரு பெயர் எதுவாக இருக்கக் கூடும்? சார்லி சாப்ளின்? அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவனிடம் கேட்டபோது, சார்லி சாப்ளினை அவனுக்குத் தெரியவில்லை. இன்றைய குழந்தைகளுக்குப் பிடித்தமான மிஸ்டர் பீன்? அவரையும் தெரியவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள சிறார்களிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாலே அவர்கள் சர்வசாதாரணமாக இந்தப் பெயர்களை உச்சரிப்பதைப் பார்க்கலாம்.
சிறார் திரைப்பட விழா
நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். மாறாக இணைய வசதி இல்லாத தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமொன்றில் வாழும் சிறார்களுக்கு ஓடிடி குறித்தெல்லாம் தெரிவதில்லை. குழந்தைகள் பார்ப்பதற்கென்று தரமான திரைப்படங்கள் உலகெங்கும் வந்துகொண்டிருக்கின்றன. நம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவையெல்லாம் எட்டவேண்டாமா? தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இப்படி யோசித்ததன் விளைவுதான் இன்று சிறார் திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ளது.
மாதம் தோறும்
மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை ’சிறார் திரைப்பட விழா’ என்கிற பெயரில் பள்ளிக் கல்வி துறை வகுத்துள்ளது. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படங்கள் மாணவர்களுடைய சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. இக்காட்சி ஊடகத்தின் வாயிலாக இவ்வுலகத்தை புதிய பார்வையில் மாணவர்களைக் காண வைப்பதும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம்.
தனி பாடவேளை
இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆசிரியர் மூலமாக 6 முதல் 9 வரை பயிற்றுவிக்கும் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் இப்பொறுப்பு வழங்கப்படும்.
திரையிடுதலுக்குத் தேவையான உபகரணங்கள் பள்ளியில் இல்லாவிட்டால், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் வெளியிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
வினாடி - வினா
திரையிடுதலுக்கு முன்பாகவே பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிறார் திரைப்பட விழாவின் நோக்கங்கள் குறித்தும் திரையிடப்படும் படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கதை வெளிப்பட்டுவிடாமல் மாணவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தி படம் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவார்கள். திரைப்படம் முடிந்தபின்னர், அது குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வினாடி-வினா நிகழ்வும் நடத்தப்படும். பின்னூட்டக் கேள்வித்தாள் வழங்கப்பட்டு அதன்மூலம் மாணவர்களின் கருத்துகள் அறியப்படும்.
சிறந்த விமர்சனங்களுக்கு பரிசு
5மாணவர்களை இத்திரைப்படம் குறித்து 2-3 நிமிடங்களுக்குப் பேசவைக்கப்படுவார்கள். மாணவர்கள் திரைப்படம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுதி அளிக்கலாம் அல்லது வரைந்தும் அளிக்கலாம். ஏதேனும் ஒரு காட்சியை அல்லது உரையாடலை நடித்தும் இயக்கியும் காட்டலாம். திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் பிரசுரிக்கப்படும்.
ஸ்பாட் லைட்
திரையிடப்பட்ட படத்திற்கு இரண்டாம் பாகம் என ஒன்று இருந்தால், அது எப்படி இருக்கக்கூடும் என்பதை குழந்தைகளை அவர்களின் கற்பனைகொண்டு எழுத வைக்கப்படுவார்கள். கதைக்களம், கதைமாந்தர்கள், உரையாடல், கதை நடக்குமிடம், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ‘ஸ்பாட்லைட்’ என்கிற நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறப்பாக பதிலளிக்கும் தனிநபர் ஒருவருக்கும் அணி ஒன்றிற்கும் பரிசுகள் வழங்கப்படும்.
’இந்தக் கதை எங்கே நிகழ்கிறது?, ‘இந்த இடத்தில் நிகழ்கிறது என எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?’, ’ஏதேனும் ஒரு பாத்திரத்திற்கென தனியாக ஒரு வண்ணமோ அல்லது குறிப்பிட்ட ஒலியோ இசையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகள் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் இடம்பெறும். ஒவ்வொரு மாதமும் திரையிடலுக்கு முன்பாக பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஸ்பாட்லைட் நிகழ்வுக்கென தனியாக கேள்விகளை உருவாக்கலாம்.
பள்ளி அளவில் சிறந்த மாணவர்கள் தேர்வு
’சிலவர் ஸ்க்ரீன் ஆப்’ என்கிற ஒரு கைப்பேசிச் செயலி உருவாக்கபட்டு அதன் வாயிலாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும். திரையிடல் முடிந்த நாளிலேயே அதற்கான பின்னூட்டங்கள் செயலி வழியாக பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய திரைப்படத்திற்கான சுட்டி பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும் ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.
கலைதுறை வல்லுநர்களோடு கலந்துரையாடல்
சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு மாநில அளவில் ஒரு வாரத்திற்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட நிகழ்வுகளில் பங்கேற்பர். கலைத்துறை சார்ந்த வல்லுநர்களோடு இம்மாணவர்களை கலந்துரையாடலில் பங்கேற்கச் செய்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
அயல் நாட்டு சுற்றுலா
மாநில அளவில் பங்கேற்கும் மாணவர்களிலிருந்த 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்த மேலும் அறிந்துகொள்ளும் வகையில் அயல்நாடொன்றிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். திரைப்படங்கள் குறித்த விமர்சனப் பார்வையை மாணவர்களிடையே வளர்க்கவேண்டும் என்பதே இத்திரையிடலின் நோக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT