Last Updated : 05 Jul, 2022 04:42 PM

 

Published : 05 Jul 2022 04:42 PM
Last Updated : 05 Jul 2022 04:42 PM

மீனவர்களையும் படகையும் மீட்க காங்கிரஸ் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: நாராயணசாமி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தாரை சந்தித்துப் பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி, எம்.பி., வி.வைத்திலிங்கம்.

காரைக்கால்: மீனவர்களையும் படகையும் மீட்க காங்கிரஸ் கட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கூறினார்.

காரைக்கால் மாவட்டம் காசாக்குடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 1 ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 5 பேர், அருகில் உள்ள தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த 7 மீனவர்கள் என 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த 2 ம் தேதி இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் ஆகியோர் இன்று (ஜூலை 5) காசாகுடிமேடு மீனவக் கிராமத்துக்குச் சென்று, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து மீட்கவும், படகினை மீட்டுத் தரவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளுமாறு மீனவர்கள் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் டெல்லிக்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தானும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி முயற்சிகள் மேற்கொள்வதாகவும் நாராயணசாமி, மீனவர்களிடம் உறுதியளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: ''காரைக்கால் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்படும் படகுகளை திரும்பக் கொடுப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பாஜக ஆட்சிக் காலத்தில், கைது செய்யப்படும் தமிழக, காரைக்கால் மீனவர்களை விடுவிப்பதில்லை. படகுகளை ஏலம் விடுகின்றனர்.

இலங்கை அரசுக்கு இந்தியா பல உதவிகளை செய்கிறது. ஆனால் இலங்கை அரசு நமது மீனவர்களை பழிவாங்கும் நோக்கில் நடந்து கொள்கிறது. மீனவர்களையும், படகையும் மீட்க காங்கிரஸ் கட்சி சார்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

மீனவர் பிரச்சினைகள் குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எதுவும் பேசாமல் இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''அவர் ஒரு மவுன சாமியார். புதுச்சேரி நிர்வாகம் சீர்கெட்டுள்ளதற்கு அவர்தான் முக்கியமான காரணம்'' என்று நாராயணசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x