

காரைக்கால்: காரைக்காலில் காலரா பரவல் சூழலுக்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் எனவும், புதுச்சேரி முதல்வர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காரைக்காலில் ஏராளமானோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு காலரா பரவல் சூழல் உருவாகியுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (ஜூலை 5) காரைக்காலுக்கு வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கு வயிற்றுப் போக்கால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறி, பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியது: "காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடிய குடிநீர் அவ்வப்போது உரிய முறைப்படி சுத்திகரிக்கப்படவில்லை. காரைக்கால் மேடு மீனவக் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வயிற்றுப் போக்கால் பலர் பாதிக்கப்பட்ட போது, குடிநீரில் கழிவு நீர் கலந்ததே பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டது. ஆனாலும் அதன் பின்னரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது காரைக்கால் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம். சுகாதாரத் துறையை தன் வசம் வைத்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பதவியேற்று ஓராண்டு கடந்த நிலையிலும் அவர் காரைக்காலுக்கு வரவில்லை. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்து அறிக்கைவிட்ட நிலையில் முதல்வர் இன்று காரைக்கால் வந்துள்ளார். காரைக்கால் நகரப் பகுதியில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, புதிய குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
1600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடம் காலியாக உள்ளதும் இப்பிரச்சினைக்கு ஒரு காரணம்” என்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்பி சந்திரமோகன் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.