Published : 05 Jul 2022 02:19 PM
Last Updated : 05 Jul 2022 02:19 PM

12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பீர்: வெளியுறவு அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: கடந்த ஜூலை 3-ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: "இரண்டு மாதகால மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு, கடலுக்குச் சென்ற தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர், கடந்த ஜூலை 3-ம் தேதி கைது செய்ததோடு, அவர்களுடைய படகுகளையும் சிறைபிடித்துள்ளனர்.

பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, மீன்பிடித்தலை கைவிடச் செயய வேண்டும் என்பதுதான், இலங்கை கடற்படையினரின் உள்நோக்கம் என்பது இந்த கைது நடவடிக்கையின் மூலம் தெளிவாகிறது. இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கை, தமிழக மீனவர்களின் மனங்களில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, இலங்கை கடற்படையால், கைது செய்யப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம்: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்பை தலைமை நிலையச் செயலாளர் என மாற்றிவிட்டார். கட்சியின் பொருளாளராக ஓபிஎஸ் அறிவிக்கப்பட்டார். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x