Published : 14 May 2016 09:11 AM
Last Updated : 14 May 2016 09:11 AM

14-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ட்விட்டர், வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் விளம்பரம் செய்தால் நடவடிக்கை: ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்கு சேகரித்தாலோ, விளம்பரம் செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

பத்திரிகைகள், ஊடகங்களின் பிரதிநிதிகளை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* 14-ம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை என்ன செய்ய வேண்டும். செய்யக்கூடாதவை என்ன என்பதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தியுள்ளது.

* இதன்படி தொலைக்காட்சி, இணையதளம் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், கட்சித் தலைவர் படம், சின்னம், செய்திகள் இடம்பெறக் கூடாது.

* சமூக ஊடகங்களிலும் எவ்விதமான தேர்தல் பிரச்சார மும் இடம்பெறக் கூடாது. ட்விட் டர், முகநூல் மற்றும் இணைய தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் வாக்கு சேகரித்தல், விளம்பரம் செய்தல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க முடியாவிட்டாலும், தகவல் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொலைக்காட்சிகளில் கட்சிகளின், சாதக பாதகங்கள், விவாதங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

* அச்சு ஊடகங்கள் அதாவது பத்திரிகைகளை பொறுத்தவரை விளம்பரம் தொடர்பாக எந்த தடையும் இல்லை. அதே நேரம், மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் விளம்பரங்களுக்கு தடை விதித்தது. இது தொடர்பாக ஆணையம் அறிவுறுத்தல்கள் வழங்கினால் தெரிவிக்கப்படும்.

* அதேநேரம் பத்திரிகைகளால் இயக்கப்படும் இணையதளத்தில் விளம்பரம், செய்திகள் இடம் பெறுவது கூடாது. மின்னணு- செய்தித்தாளில் (e-paper) அரசியல் தொடர்பான விளம்பரங் கள் இடம் பெறக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x