Published : 05 Jul 2022 04:40 AM
Last Updated : 05 Jul 2022 04:40 AM
சென்னை: சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசின் இலக்காகும் என்று தெரிவித்தார்.
தமிழக தொழில்துறை சார்பில், ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில், ரூ.1 லட்சத்து 25,444 கோடி முதலீட்டுக்கான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் தொடக்கத்தில், மாநிலத்தில் நிதி தொழில்நுட்ப தத்தெடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் ‘டிஎன் டெக்ஸ்பீரியன்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அதற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், தமிழகத்தில் புத்தொழில்களுக்கு ஒரு களத்தை உருவாக்கும் வகையிலும், இங்குள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள், புது முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் நிதி நுட்ப முதலீட்டு களவிழாவையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதுதவிர, 11 நிதிநிறுவனங்களு டன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ரூ.22,252 கோடி முதலீட்டில் 17,654 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 21 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.1,497 கோடியில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியை தொடங்கி வைத்து, தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றையும் வெளியிட்டார்.
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது, மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகும். இது இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழாகும். இதற்கு காரணமான அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள்.
இந்த அரசு பொறுப்பேற்று 5 மாநாடுகளை நடத்தியுள்ளோம். இது 6-வது மாநாடாகும். ஓராண்டில் 6 மாநாடுகளை நடத்துவதே சாதனைதான். அனைவருக்குமான, அனைத்து துறைக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி தொழிலதிபர்கள், உலக நிறுவனங்கள் வரத் தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடக்கிறது.
தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது, தெற்காசியாவில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை ஆக்குவது, உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சென்றடையச் செய்வது, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய 4 இலக்குகளை அடைய தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசின் இலக்காகும். இன்று 11 நிதி நுட்பத் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது வெறும் தொடக்கம்தான். மாநிலத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம் வளர்ச்சிப் பாதைகளை வகுத்தால், நமது போட்டித்தன்மை பன்மடங்கு அதிகரிப்பதுடன், உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்து விளங்க முடியும்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டில் எடுத்த முயற்சிகளால் இதுவரை 192 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.2.20 லட்சம் கோடியாகும். பலதுறையிலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் தொழிற்சாலை தூத்துக்குடியில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக உருவாகும்.
வளர்ந்து வரும் துறையான செமிகண்டக்டர் உற்பத்திக்கான உயர் தொழில்நுட்ப பூங்காவை ரூ.26,500 கோடியில் தமிழகத்தில் அமைக்க ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 68 சதவீதம் தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. சமூக நீதி மாநிலமான தமிழகம், தொழில் துறையில் சிறந்த மாநிலமாகவும் உயர வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாநாட்டில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.
தங்கம் தென்னரசு தேர்வு ஏன்?
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் தங்கம் தென்னரசு. இந்த முறை அமைச்சரவையில் அவருக்கு அதே துறையை வழங்குவதா, வேறு துறையை வழங்குவதா என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தொழில்துறையை தேர்வு செய்தேன்.
கடந்த காலங்களில் மிகத் தொய்வாக இருந்த இந்த துறையை மீட்க ஆர்வமான, திறமையான, துடிப்பான பல்வேறு முயற்சிகளை துணிச்சலாக செய்யும் தங்கம் தென்னரசு இருந்தால்தான் சரியாக இருக்கும் என நினைத்து அவர் பெயரை டிக் செய்தேன். என்னுடைய தேர்வு சரியானது என்பதை நித்தமும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமிழக தொழில்துறையை தங்கமாக மாற்றி வருகிறார். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT