Published : 05 Jul 2022 07:13 AM
Last Updated : 05 Jul 2022 07:13 AM
சென்னை: முதல்வர் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால்தான் ஆட்சி அமைந்து ஓராண்டிலேயே இவ்வளவு முதலீடுகள் தமிழகத்துக்கு சாத்தியமானது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
ஓராண்டுக்கு முன்பு, திமுகஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும்முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் ரூ.17 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் வந்தன. ஓராண்டு கழித்து இன்று நடக்கும் நிகழ்வில் ரூ.1.25 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. முதல்வர்மீது முதலீட்டாளர்கள் கொண்டஅசைக்க முடியாத நம்பிக்கையால்தான் இது சாத்தியமானது.
கரோனாவால் இந்தியா முழுவதும் எதிர்மறை வளர்ச்சி என்றபோது, தமிழகத்தில் மட்டும் நேர்மறை வளர்ச்சி காணப்பட்டது. அதற்கும் முதல்வரின் வழிகாட்டுதல்தான் காரணம்.
வழிகாட்டி நிறுவனம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு தமிழக தொழில்துறையின் வழிகாட்டி நிறுவனம் தன் பங்கை சீரிய முறையில் செய்துள்ளது. திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க, கல்வி நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பு பாலமாக வழிகாட்டி நிறுவனம் இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் வழிகாட்டி நிறுவனம்இணைந்து, 50-க்கும் மேற்பட்டதொழில் நிறுவனங்களுடன் பேசிஇப்பணிகளை செய்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தி பேசியதாவது: நாட்டிலேயே சிறப்பாக ஆளப்படும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அணுகுமுறைதான் இதற்கு வழிவகுத்துள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கியுள்ளதால் உள்நாடு மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தை தேர்வு செய்கின்றன.
இயல்பான வணிகம் செய்வதற்கான சூழல் அமைப்பில் தமிழகம் தற்போது 3-வது இடத்துக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழக அரசின்அயராத முயற்சிகளுக்கு சான்று.
ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, புத்தாக்க குறியீடு, மாநிலங்களின் வலுவான கட்டமைப்பு குறியீடு ஆகியவற்றில் தமிழகம் முதல் 5 இடங்களில் உள்ளது.
2021-ம் ஆண்டின் திறன் அறிக்கைப்படி, விருப்பமான இடங்களில் சென்னை,கோயம்புத்தூர் நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகள் உள்ள 2-ம் மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த ஓராண்டில் செய்யப்பட்ட 132 ஒப்பந்தங்களில் 78 செயலாக்க நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT