Published : 05 Jul 2022 07:40 AM
Last Updated : 05 Jul 2022 07:40 AM
சென்னை: தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடிமுதலீடுகளை ஈர்த்து, 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது என்ற இலக்குடன், உயிர் அறிவியல் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கையை, சென்னையில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன் சிறப்பம்சம் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது:
உலக அளவில் உயிர் அறிவியலின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பிறகு, தற்சார்பு நிலையை அடையும் இலக்குடன் தமிழகம் செயல்பட்டு வருகிறது. எனவே, உயிர் அறிவியல் துறைசார்ந்த தொழில் பிரிவுகளை வளர்க்கவும், மேம்படுத்தவும் தனியான கொள்கை தேவைப்படுகிறது.
தேசிய பரிசோதனை மையங்களுக்கான அங்கீகார கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 300-க்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. நாட்டின் 2-வது பெரியமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும், உயிர் அறிவியலில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டைசல் உயிர் பூங்காவும் தமிழகத்தில்தான் உள்ளன.
தமிழகத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், மக்களுக்கு தரமான வாழ்க்கை,மருத்துவ சேவையை வழங்கவும் உயிர் அறிவியல் துறைக்கு முக்கியத்துவம் தரவேண்டி உள்ளது.
அந்த வகையில், முதல்வர் வெளியிட்டுள்ள இந்த கொள்கை, உயிர்தொழில்நுட்பம், உயிர் - சேவைகள், மருந்தியல், ஊட்டச்சத்து மருந்தியல் தொழில் துறை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவ துணிகள் துறை ஆகிய உயிர் அறிவியல் துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, துறையை வலுப்படுத்தவும், கட்டமைப்பு மற்றும் திறன் வாய்ந்த மனிதவளத்தை மேம்படுத்தவும் உதவும்.மேலும், வழிமுறைகளை எளிதாக்கி, தொழில் புரிவதையும் இது இலகுவாக்கும்.
மருத்துவ தொழில்நுட்பம், உயிரியல் துறையில் ஆய்வாளர்களின் மையமாக தமிழகத்தை மாற்றுவது, உயிர் அறிவியல் நிறுவனங்கள் எளிதாக தொழில் செய்யும்இடமாக தமிழகத்தை உருவாக்குவது, உள்ளூர் தயாரிப்பு திறன், மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி ஆகியவை இந்த கொள்கையின் முக்கிய திட்டமாக உள்ளது. அத்துடன், மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு உயிர் அறிவியல் துறையில் முதலீடுகளை ஈர்த்து, அதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது இதன் இலக்காகும்.
இதற்காக உயிர் தொழில்நுட்பம், மருந்தியல் பூங்காக்கள், மருத்துவ உபகரண பூங்காக்கள், மருத்துவ துணிகள் துறை பூங்காக்கள், சிறப்பு மையங்கள் உருவாக்கப்படுகின்றன. முதலீடு, பயிற்சி மானியங்கள், நிலத்தின் விலை, சான்றிதழ் புதுப்பித்தல் போன்றவற்றில் ஊக்கச் சலுகையும் வழங்கப்படுகிறது. பல்வேறு அரசின் நிதி அமைப்புகள் மூலம் கடன் வழங்கப்படுவதுடன், திறன் மேம்பாட்டு மையம்,தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனங்களை அமைத்தல் ஆகியவையும் இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
தொழில் வழிகாட்டுதலுக்காக பிரத்யேகமாக உயிர் அறிவியல் தொழில் வளர்ச்சி பிரிவும் உருவாக்கப்பட உள்ளது. அரசின் சார்பில், வெளிநாட்டு பயிற்சிக்கான மானியம் உட்பட பல்வேறு மானியங்களும் வழங்கப்படும் என்று தொழில் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT