Published : 05 Jul 2022 07:26 AM
Last Updated : 05 Jul 2022 07:26 AM
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அடுத்த தலைமுறைககு வழிவிட வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ‘நமது எம்ஜிஆர்’, ‘நமது அம்மா’ ஆகிய நாளிதழ்களில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். ‘நமது அம்மா’ நாளிதழில் ஓபிஎஸ்ஸூக்கு முதல் முக்கியத்துவம், இபிஎஸ்ஸூக்கு 2-வது முக்கியத்துவம் வழங்குவது வழக்கம்.
சமீபகாலமாக இபிஎஸ்ஸூக்கு முதல்முக்கியத்துவம் தருமாறு அழுத்தம்தரப்பட்டது. இந்நிலையில் நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறினேன். கடந்த அதிமுக பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார்.
நான்கரை ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்த அனுபவம் மிக்க இபிஎஸ், அந்த நிகழ்வை தடுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. அதை நினைத்து வருந்துகிறேன்.
பணம் கொடுத்து எதையும்செய்யலாம் என நினைப்பவர்களால் இபிஎஸ் சூழப்பட்டுள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களை எப்படி தன் பக்கம் ஈர்த்து முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுக்குழுவிலும் அதையே செய்ய முற்படுகிறார்.
பதவிக்காக அரசியல் அபகரிப்பை இபிஎஸ் மேற்கொள்கிறார். இந்த ஜனநாயக படுகொலையை ஏற்க முடியாது. எதிர்க்கட்சியாக இருக்கும் இந்த தருணத்தில் உட்கட்சி யுத்தத்தை இபிஎஸ் தொடங்கி இருப்பது தவறானது.
திமுக, பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் அடுத்த தலைமுறை வந்துவிட்டது. அதனால், அதிமுகவிலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும்.
கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டறிந்து விரைவாக சட்டத்தின் முன்பு நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நடந்துவிட்டால் அது தமிழக அரசியலை புரட்டிப் போட்டுவிடும். அதிமுக பொதுக்குழுவும் அமைதியாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT