Published : 05 Jul 2022 07:12 AM
Last Updated : 05 Jul 2022 07:12 AM

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் மாற்று மதத்தினர் பங்கேற்க தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

மதுரை: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் மாற்று மதத்தினர் பங்கேற்க தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் பிரம்மபுரத்தைச் சேர்ந்த சி.சோமன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விவரம்:

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஜூலை 6-ம் தேதி (நாளை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பொதுவாக கன்னியாகுமரி மாவட்ட கோயில் களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதியில்லை.

இந்நிலையில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர். கும்பாபிஷேக விழா அரசு விழாவாக நடைபெறும்போது வழக்கமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படாமல் கோயிலின் புனிதம் கெட வாய்ப்புள்ளது. எனவே, கும்பாபிஷேக விழாவின்போது கோயில் வளாகத்துக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என கோயில்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் சொல்லப்படவில்லை.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அவர்களின் மதத்தை உறுதி செய்யச் சொல்வது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிரபல பாடகர் ஜேசுதாஸ் வேறு மதத்தை சேர்ந்தவர்தான். இருப்பினும் அவர் ஏராளமான இந்து கடவுள் பாடல்களை பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கவிடப்படுகிறது. வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும், நாகூர் தர்காவுக்கும் இந்துக்கள் ஏராளமானோர் சென்று வழிபட்டு வருகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. பரந்த மனப்பான்மையுடன் அணுகுகிறது. மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x