

குறைந்தபட்ச கூலியை அதிகரித்து வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அப்போது, உள்ளாட்சி பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். தங்களுக்கு தினக்கூலியாக ரூ.750 வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களில் 5 பேர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "மதுக்கரை சந்தை அருகே அரசு மருத்துவமனையும், குடியிருப்புகளும் அமைந்துள் ளன.
எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக் கக்கூடாது "எனத் தெரிவித்துள்ள னர்.
கோவை ஏழூர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "கோவை-பொள்ளாச்சி சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ள ஏழூர் பிரிவைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த இடத்தில் சுங்கச் சாவடியை அமைத்தால் விவசாயி கள் விளைபொருட்களை அடிக் கடி எடுத்துச் செல்லும்போது அவதிக்குள்ளாவார்கள்.
எனவே, இங்கு சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளனர்.
கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "கோல்டுவின்ஸ் பகுதியில் சுயம்பு தம்பிரான் சுவாமி கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோயிலை அகற்ற முயற்சி நடந்து வருகிறது.
எனவே, இதை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, தொடர்ந்து கோயில் அங்கேயே செயல்பட வழிவகை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.