சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: பொது மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: பொது மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2 வாரங்களாக சென்னையில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. 3-ம் தேதி மட்டும் 1,072 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி, முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், ஒவ்வொரு தனிநபரும் கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும்போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in