Published : 05 Jul 2022 06:34 AM
Last Updated : 05 Jul 2022 06:34 AM
சென்னை: மாரடைப்பு, விபத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விபத்து வழக்குகளை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கையாளுகின்றனர். மேலும், விபத்து தொடர்பான தகவல்கள் கிடைத்த உடனே விபத்து நிகழ்ந்த இடங்களுக்கு போக்குவரத்து போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொள்கின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளையும் போக்குவரத்து போலீஸார் மேற்கொள்கின்றனர்.
விபத்து நிகழ்ந்த இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து போலீஸாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தெரிந்திருந்தால் ஆபத்து கட்டத்தில் இருப்பவர்களுக்கு முதலுதவி செய்து, அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
எனவே, போக்குவரத்து போலீஸாருக்கு முதலுதவி சிகிச்சையை கற்றுக் கொடுத்தால் அவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றுவார்கள் என போக்குவரத்து போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு பயிற்சியளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலம், போக்குவரத்து அமலாக்கப் பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போக்குவரத்து போலீஸார் 311 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
படிப்படியாக அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் இதேபோல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT