Published : 05 Jul 2022 06:09 AM
Last Updated : 05 Jul 2022 06:09 AM
சென்னை: கலந்தாய்வு நடத்தாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020-21 கல்வி ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் காலியாக இருந்த 113 இடங்களில், கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடாக 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ளவர்கள் யார், தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலித்த தொகை எவ்வளவு என்பது குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், "தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடந்ததற்கு மருத்துவ மேற்படிப்பு தேர்வுக் குழு செயலராக இருந்த செல்வராஜன்தான் காரணம். அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்" என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு தனி நீதிபதி உத்தரவிட்டார்.
"முறைகேட்டுக்கு காரணமாக இருந்த முன்னாள் அதிகாரி செல்வராஜனின் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட 2 மருத்துவ மாணவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். அத்தொகையை செல்வராஜனின் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்" என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து செல்வராஜன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏற்கெனவே தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் நடந்தது.
அப்போது செல்வராஜன் தரப்பில், “தனியார் கல்லூரிகள்தான் அதிக கட்டணம் வசூலித்தன. ஆனால், இந்த விவகாரத்தில், தேர்வுக் குழு செயலராக இருந்த மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7 கலந்தாய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 கலந்தாய்வுகள் மட்டும் நடத்தியது ஏன்?” என்று கேள்வி எழுப்பி தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள், “கலந்தாய்வு நடத்தாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்திய விவகாரத்தில் மருத்துவ தேர்வுக் குழு முன்னாள் செயலர் செல்வராஜன் மீதான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தொடரலாம்.
அவரது ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அவர் மீதான துறை ரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT