Published : 05 Jul 2022 07:43 AM
Last Updated : 05 Jul 2022 07:43 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலின் சுற்றுச் சுவர் பணிகள் பல்வேறு நிர்வாக காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அப்பணியை விரைந்து முடிக்க அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கோயிலின் சுற்றுச்சுவர்கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. கோயிலுக்கு பின்னால் அர்ஜூனன் தபசு மற்றும் கிருஷ்ண மண்டபம் ஆகிய குடவரை சிற்பங்கள் அமைந்துள்ளதால், கோயிலுக்காக அமைக்கப்படும் சுற்றுச்சுவர் இச்சிற்பங்களை மறைக்கும் எனக்கூறி கட்டுமான பணிகளுக்கு தொல்லியல் துறை ஒப்புதல் வழங்கவில்லை.
இதனால், கோயிலின் பாதுகாப்பு கருதியும் மற்றும் மேற்கண்ட சிற்பங்களை மறைக்காத வகையிலும் சுற்றுச்சுவர் அமைக்க தொல்லியல் துறையிடம் ஒப்புதல் கோரப்பட்டது. ஆனால் இத்திட்டம் நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்தது.
பின்னர், உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவிடம் தொல்லியல் துறையின் வடிவமைப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொல்லியல் துறை இப்பணிக்கு கடந்த 2020-ல் ஒப்புதல் வழங்கியது.
இதன்பேரில், சுற்றுச்சுவர் அமைக்க ரூ.22.8 லட்சம் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் சுற்றுச்சுவர் அமைக்காமல் வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்துமாறு சுற்றுலாத் துறையினர் அறிவுறுத்தி வந்தனர். இதனால், மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கோயிலின் சுற்றுச்சுவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியதாக, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மீண்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளததாக கோயில் செயல் அலுவலர் சக்திவேல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT