Published : 05 Jul 2022 07:49 AM
Last Updated : 05 Jul 2022 07:49 AM

செஸ் போட்டிகளை முன்னிட்டு பூங்காக்கள், வண்ண ஓவியங்களால் புதுப் பொலிவு பெறுகிறது மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சாலையோர சுவர்களில் வரையப்பட்டுள்ள தமிழக பாரம்பரிய கலாச்சார ஓவியங்கள்.

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பாரம்பரிய கலைச்சின்னங்களை சுவரோவியமாக வரையும் பணிகளால் மாமல்லபுரம் பகுதி புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளது.

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 187 நாடுகளை சேர்ந்த 227 அணிகளின் சார்பில் சுமார் 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலர் தலைமையில் பல்வேறு பணிக்குழுக்களை ஏற்படுத்தி தமிழக அரசு செய்து வருகிறது.

சர்வதேச அளவில் வீரர்கள் பங்கேற்க உள்ளதால் போட்டி நடைபெரும் மாமல்லபுரத்தை அழகாக்க பேரூராட்சி நிர்வாகம் ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது.

இதில் குடிநீர் வசதிகள், பூங்காக்கள் மற்றும் சாலையோரங்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல் போன்ற பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

நகரின் நுழைவு பகுதியாக கருதப்படும் தேவனேரி, நகரின் பிரதான நுழைவு வாயில், கடற்கரை கோயில் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை ஆகிய பகுதிகளில் அலங்காரச் செடிகளுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

மேலும் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் தமிழக பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

கூடுதலாக வாகன நிறுத்துமிடம் அமைக்க தலைமை செயலர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து தற்போது போட்டி நடைபெறும் அரங்கம் அருகேயுள்ள காலிநிலங்களை கண்டறியும் பணிகளில்வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x