

திருத்தணி: பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப்பட்டு, திருத்தணி வட்டங்களில் பழங்குடியின மக்கள் தங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சான்றிதழ் வழங்குவது தொடர்பான கோரிக்கை கூர்நோக்கு கமிட்டி பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், கீளப்பூடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (75), பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின சான்றிதழ் விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார்.
பழங்குடியின சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதையடுத்து நேற்று திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு காரணமான வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தபின் கலைந்து சென்றனர்.
இவர் இதே கோரிக்கைக்காக கடந்த ஆண்டு திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தின்போது, கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.