

காரைக்காலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காலராவால் அல்ல, வயிற்றுப்போக்கால் தான். ஓரிரு நாளில் நிலைமை சீரடையும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டார்.
காரைக்காலில் ஆய்வுக்குப் பிறகு புதுச்சேரிக்கு திரும்பிய அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காரைக்காலில் காலராவால் அதிகம் பேர் பாதிக்கப்படவில்லை. வயிற்றுபோக்கு பாதிப்பில் 700 பேர் வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த வாரங்களில் தினசரி 15 முதல் 20 பேர் வரை வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பு, தனியார் தண்ணீர் விநியோகத்தில் பாதிப்பு, மாம்பழ சீசன் ஆகியவற்றால் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்ததால் நோய்த்தொற்றும், நோயாளிகள் வருகையும் குறைந்துள்ளது.
காலரா பாதிப்பில் 2 பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பரவியுள்ளது. அது உண்மையில்லை. 20 நாட்களுக்கு முன்பு இணைநோய் பாதிப்பில் இருவர் இறந்துள்ளனர். தற்போது, குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்றவை சரி செய்யப் பட்டுள்ளது.
மருத்துவர்கள், ஆஷா பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வாந்தி, பேதி ஏற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு வராததால் முன்பு தொற்று இருந்தது. தற்போது குறைந் துள்ளது. காரைக்கால் மக்கள் நலமுடன் உள்ளனர்.
உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதல், ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் மருத்துவ அவசர நிலை அறிவிப்பது வழக்கமானது தான்.
அதனால் அச்சம் தேவையில்லை. ஓரிரு நாளில் காரைக்கால் நிலைமை சீரடையும் என்று குறிப்பிட்டார்.