

ராமேசுவரம் அருகே வடமாநில இளைஞர்களால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்தினர் நிவாரணம் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
ராமேசுவரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 48 வயது மீனவப் பெண் கடந்த மே மாதம் 24-ம் தேதி வடமாநில தொழிலாளர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கிராம மக்களும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணின் 3 மகள்கள், கிராம மக்கள் மற்றும் அனைத்திந்திய மாதர் சங்க நிர்வாகி கண்ணகி தலைமையிலான அந்த அமைப்பினர் நேற்று ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில், குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மீனவப் பெண்ணின் குடும்பத்தினர் கூறியதாவது: கொலை நிகழ்ந்து 41 நாட்களாகியும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. எங்களுக்கான அரசு நிவாரணத்தையும் வழங்கவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வீடு கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியையும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தனர்.