Published : 05 Jul 2022 04:20 AM
Last Updated : 05 Jul 2022 04:20 AM

கரோனா பரவல் அதிகரிப்பதால் புதுக்கோட்டையில் முன்கூட்டியே நடத்தப்படும் மொய் விருந்து

புதுக்கோட்டை

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒரு மாதம் முன்னதாகவே மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, நெடுவாசல், கொத்தமங்கலம், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, கறம்பக்குடி, அரசர்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் மொய் விருந்து விழா நடத்தப்படுவது வழக்கம். இதில், ஒவ்வொருவரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா நடத்துவார்கள்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஆடி, ஆவணியில் நடத்தப்பட வேண்டிய மொய் விருந்து விழா தள்ளிப்போய், மிகவும் தாமதமாக நடத்தப்பட்டது. இதனால், மொய் விருந்து விழா நடத்த திட்டமிட்டிருந்தோருக்கு பணப் பரிமாற்றத்தில் தொய்வு ஏற்பட்டு, பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது.

மேலும், சீராக மொய் செய்ய வேண்டிய நிலையில் இருந்து மாறி, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு மொய் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், தொகையும் அதிகமாக தேவைப்படும். இதுதவிர, கரோனா பரவல், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையின்மை போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே மொய் விருந்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகை வசூலாவதில்லை.

இந்நிலையில், நிகழாண்டும் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீண்டும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்குமேயானால் கடந்த ஆண்டைப் போன்று, நிகழாண்டும் மொய் விருந்து விழா நடத்த தடை விதிக்கும் சூழல் ஏற்படலாம். எனவே, அத்தகைய நிலையைத் தவிர்ப்பதற்காக ஆனி மாதத்திலேயே அனைத்து ஊர்களிலும் மொய் விருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மொய் விருந்து நடத்தி வருவோர் கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனா பரவலால் ஆடியில் நடத்த வேண்டிய மொய் விருந்து தை மாதம்தான் நடத்தப்பட்டது. 6 மாத இடைவெளியில் மீண்டும் தற்போது மொய் விருந்து நடத்தப்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில், அடுத்தடுத்து மொய் விருந்து நடத்தப்படுவதால் மொய் விதிதாச்சாரம் குறைந்துள்ளது. ஒருவேளை கரோனா பரவலைக் காரணம் காட்டி, ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா நடத்த முடியாமல் போனால் பொருளாதார நெருக்கடியில் சிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக ஒரு மாதம் முந்தியே நடத்தப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x