

ராமநாதபுரம் தொகுதியில் டாக்டர் மணிகண்டன் முதன்முறையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால் அமைச்சரானார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் அதிமுகவும், ஒன்றில் காங்கிரஸூம் வெற்றி பெற்றது. இதில் ராமநாதபுரம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் மணிகண்டன் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லாவை 33,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் அறிவிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட மணிகண்டன், அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை செ.முருகேசன் மாவட்ட அவைத்தலைவராகவும், இவரது அண்ணன் மனைவி கவிதா சசிக்குமார் ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவராகவும் உள்ளனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராக பணியாற்றிய மணிகண்டன், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். இவரது மனைவி வசந்தி. மகப்பேறு மருத்துவரான இவர், மதுரை அண்ணாநகரில் கிளினிக் வைத்துள்ளார்.
மணிகண்டன் அதிமுக மருத்துவர் மணி மாநில துணைச் செயலாளராகவும் உள்ளார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது படித்த ஒரு இளைஞரை ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தியுள்ளார். அதனால் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரை தோற்கடித்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அதிமுகவினர் கூறி வந்தனர். மேலும், இவர் மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றியபோது ஏழை, எளிய நோயாளிகளை பரிவோடு அணுகி சிறப்பான மருத்துவச் சிகிச்சை அளித்து வந்துள்ளார். குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் என்று சொன்னால் சிறப்புக் கவனம் எடுத்து சிகிச்சை அளித்துள்ளார்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத் தின் மகனும், இவரும் நண்பர்கள். மேலும் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதாலும், இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதாக அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கடந்தமுறை பரமக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற டாக்டர் எஸ். சுந்தரராஜ் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக பதவி வகித்தார். பரமக்குடி துப்பாக்கிச்சூடு அதிருப்தி மற்றும் கட்சியில் மூத்தவர் என்ற காரணங்களால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால், இந்த முறை நாற்பது வயது இளைஞரான மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவருக்கு சுகாதாரத்துறை கூட கிடைக்கலாம் என கூறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் கிடைத்துவிட்டதால் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். பொதுமக்களும் அரசின் புதிய திட்டங்கள் மாவட்டத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.