Published : 04 Jul 2022 06:42 PM
Last Updated : 04 Jul 2022 06:42 PM

“வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் அதிமுக இனி தேறாது” - டிடிவி தினகரன் கருத்து

தருமபுரி: "அதிமுக என்ற இயக்கம் வீழ்ச்சியை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது, இனி அந்தக் கட்சி தேறாது” என்று தருமபுரியில் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் அமமுக சார்பில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று (4-ம் தேதி) நடந்தது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது:

''பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேச்சு நிலவுகிறது. இவ்வாறு கூறப்படுவதை குறிப்பிட்டு நான் பேசினேன். இது தொடர்பாக கே.பி.முனுசாமி என் மீது மான, நஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்கிறார். குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். என் மீது வழக்கு தொடுக்கட்டும், நீதிமன்றம் விசாரணை நடத்தட்டும்.

அதிமுக-வில் உள்ள பழைய நண்பர்கள் கூறியதை, வெளியில் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுவதை குறிப்பிட்டு கூறினேன். நேரடியாக பார்த்திருந்தால் இன்னும் தைரியமாக கூறியிருப்பேன். இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட்ட மாட்டேன்.

ஜெயலலிதாவின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்ற அமமுக தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அதிமுக-வில் பொதுக்குழு கூட்டம், பொதுச் செயலாளர் தேர்வு நடந்தால் என்ன? நடக்காவிட்டால் எனக்கென்ன? அதிமுக என்ற இயக்கத்துக்கு ஒற்றை அல்லது இரட்டை என எப்படியான தலைமை வந்தாலும் கூட, இனி அந்தக் கட்சி தேறாது. அந்த இயக்கம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தற்போது போதைப் பொருள் அதிக அளவில் விற்பனையாகிறது. இது, வருங்கால சந்ததியை அழிக்கக் கூடிய ஒன்று. காவல்துறை இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருட்கள் விற்பனையை தமிழகத்தில் முழுமையாக அழிக்க வேண்டும் என அமமுக சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்வதை செய்வதில்லை, மாறாக நடக்கிறார் என்று தமிழக மக்கள் எண்ணத் தொடங்கி விட்டனர். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் சிறந்தவர்கள் தான். இருந்தாலும், 'கொல்லர் பட்டறையில் ஈக்களுக்கு வேலை இல்லை' என்று கூறுவது போல எம்எல்ஏ-க்களே இல்லாத எங்கள் கட்சிக்கு அங்கே வேலையே இல்லை.

கடந்த ஓராண்டாக தமிழக மக்களுக்கு சோதனைகள் தான் அதிகம் வந்துள்ளது. ஊடக வெளிச்சம், விளம்பரங்கள் தான் இந்த ஆட்சி மீது அதிகம் உள்ளதே தவிர, மக்கள் பலனடைந்ததாகத் தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில், கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x