

சென்னை: சூழலை மாசுபடுத்தாமல் தொழில்கள் வளர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மநீம இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சூழலுக்கும், சுற்றியுள்ள மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த மணலி தனியார் இரும்பு தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் 25.04.2022 அன்று கோரிக்கை விடுத்திருந்தது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு, முதல்வர் தனிப்பிரிவில் மனு, கள ஆய்வு என மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளால் தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.
தற்போது, விதிமீறல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக அந்தத் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மூடுவதற்கான வழிமுறைகளும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூழலை மாசுபடுத்தாமல் தொழில்கள் வளர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்'' என்று மநீம தெரிவித்துள்ளது.