Published : 04 Jul 2022 12:56 PM
Last Updated : 04 Jul 2022 12:56 PM

சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர வாயப்பு: யாருக்கு? எப்படி? - முழு விவரம்

சென்னை: சென்னையில் ஒரு சிலருக்கு மீண்டும் சொத்துவரி உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

உலக வங்கி நிதி உதவியின் கீழ் சென்னை சிட்டி பாட்னர்ஷிப் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க Athena Infonomics India Pvt.Ltd.. என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிறுவனம் தனது பரிந்துரைகளை சென்னை மாநகராட்சிக்கு சமர்பித்துள்ளது.

இதன் விவரம் வருமாறு: புவிசார் தகவல் அமைப்பை பயன்படுத்தி, வரி மதிப்பீடு குறைவாக செய்யப்பட்ட இனங்கள் என கண்டறியப்பட்டவைகளை 3-வது நபரைக் கொண்டு வரி மதிப்பீடுகள் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இப்பணி மார்ச் 2023க்குள் முடிக்கப்பட வேண்டும்.

* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடமிருந்து பெறப்பட்ட விவரங்களில், வணிக உபயோக பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள சில இனங்களுக்கு, சென்னை மாநகராட்சியால் குடியிருப்பு இனங்கள் என வரி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு, சென்னை மாநகராட்சியால் குடியிருப்பு அல்லாத பகுதி என மறுமதிப்பீடு செய்வதன் மூலம் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டும். இப்பணி பிப்ரவரி 2023-க்குள் முடிக்கப்பட வேண்டும்.

* சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்வதன் மூலம், சொத்து வரி வருவாய் உயர்த்தப்பட வேண்டும்.

* அலைபேசி கோபுரங்கள் மீதான சொத்துவரி விதிப்புகள் மேற்கொண்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2022-க்குள் சொத்துவரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் முதல் ஜீலை மாதம் வரை சிறப்பு நிகழ்வாக நிலுவை தொகை வசூல் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால் சென்னையில் மீண்டும் சொத்துவரி உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொழில்வரி , நிறுமவரி, தொழில் உரிமம், விளம்பரக் கட்டணம் மற்றும் உரிமம் கட்டணம். வாகன நிறுத்த மேலாண்மை. நிலகுத்தகை தொடர்பாகவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x