

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பதற்காக சென்னை உள்பட 10 இடங்களில் அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்.
அடுத்தகட்டமாக மேலும் 90 இடங்களில் இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளன.
அதிமுக அரசு பொறுப்பேற்றதும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்க பசுமைப் பண்ணை காய்கறி அங்காடி, அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5-க்கு பொங்கல், பகலில் ரூ.5-க்கு சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் விற்கப்படுகிறது. இரவில் ரூ.3-க்கு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல வெளிமாநிலங்களும் இந்த திட்டத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளன.
இதேபோல் கூட்டுறவுக் கடைகளில் தரமான அரிசி கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக தொலைதூர பஸ்களிலும் பஸ் நிலையங்களிலும் ரூ.10-க்கு அம்மா குடிநீர் கிடைக்கிறது. சமீபத்தில் ‘அம்மா உப்பு’ விற்பனையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 100 இடங்களில் ‘அம்மா மருந்தகங்கள்’ திறக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை செய்து வருகிறது.
ரூ.1 கோடியில் அமைக்கப் பட்டுள்ள இந்த அம்மா மருந்த கங்களை முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயல கத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ்சிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார். இந்த மருந்த கங்களில் 10 முதல் 12 சதவீதம் வரை மருந்துகள் விலை குறைத்து விற்கப்படும். அடுத்தகட்டமாக, சென்னை உள்பட 90 இடங்களில் அம்மா மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளன.
இதுதவிர, வேறு சில திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். ரூ.7.75 கோடியில் 33 வேளாண் பொருள் சேமிப்புக் கிடங்குகள், ரூ.1.05 கோடி செலவில் கட்டப்பட்ட 19 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பாதுகாப்பு அறைகள், ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் திண்டுக்கல் மற்றும் நெல்லையில் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக கட்டிடங்கள். ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பழநியில் விதை விற்பனை நிலையம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைக்கிறார்.
பெட்ரோல் நிலையம்
சென்னை சேப்பாக்கத்தில் ரூ.85.31 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள கூட்டுறவுத்துறை உதவி ஆணையர் அலுவலககட்டிடம், ரூ.2.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகள், சென்னை பெரியார் நகரில் அமைக் கப்பட்டுள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க பெட்ரோல் நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் நிர்மலா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சந்திரசேகரன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கிர்லோஷ் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
10 இடங்களில்
முதல்கட்டமாக நங்கநல்லூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தலா ஒன்று, சேலம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தலா 2 என தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.