

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவர் என்பவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு எப்படி தனி அதிகாரம் உள்ளதோ, அதேபோல் குடியரசுத் தலைவருக்கும் உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக உள்ளது.
காரைக்காலில் காலரா
காரைக்காலில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் கோட்டுச்சேரி, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் வாந்தி பேதி ஏற்பட்டுகாலரா அறிகுறி வந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இந்த புகார் வந்தபோது, இதனை அரசு ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் 800 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஒரு பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
முதல்வர்தான் சுகாதாரத் துறையின் அமைச்சராக உள்ளார். அவர் ஒரு முறைகூட காரைக்காலுக்கு செல்லவில்லை. மருத்துவத் துறை மீது முதல்வர் கவனம் செலுத்தாததால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இத்துறைகள் மெத்தனமாக செயல்படுவதற்கு காரணம் முதல்வரும், அமைச்சர்களும் ஒற்றுமையாக செயல்படதாததுதான் என்றார்.