Published : 04 Jul 2022 06:35 AM
Last Updated : 04 Jul 2022 06:35 AM
சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. தலைமையில் சென்னையில் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஒப்பந்தம் இன்னும் முடியாத நிலை உள்ளது. கூட்டமைப்பு சங்கங்கள் வலியுறுத்திய அடிப்படையில் ஊதிய விகிதங்கள் கணக்கிடுவதில் அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.
எனவே, பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுதல், 10 ஆண்டுகால வேலைநிறுத்த நாட்களை முறைப்படுத்துவது, நிலையாணை, மலைவாழ்படி போன்ற முக்கியமான கோரிக்கைகளை இறுதிப்படுத்தி விரைவில் ஒப்பந்தத்தை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மேற்கொள்ள வேண்டும். 2020-ம் ஆண்டு மே முதல் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், மரணம் அடைந்தவர்கள், நிகழாண்டு ஜூன் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.
பெண்களுக்கு கட்டணமில்லா பயணத்துக்கான பேட்டா தற்போது இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது சரியல்ல. 80:20 என்ற அடிப்படையில் அனைத்து வகை பேருந்துகளுக்கும் பேட்டா விகிதத்தை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கவும், தனியார் பேருந்துகளை இயக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும். கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்கப்படாமல் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை மேற்கொள்ள தொடங்கினால், மாநகர போக்குவரத்து கழகம் முற்றுகையிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT