நேப்பியர் பாலம் முதல் செல்ஃபி பாயின்ட் வரை மெரினாவில் ரோப் கார் சேவை: சாத்தியக்கூறுகளை ஆராய மாநகராட்சி திட்டம்

நேப்பியர் பாலம் முதல் செல்ஃபி பாயின்ட் வரை மெரினாவில் ரோப் கார் சேவை: சாத்தியக்கூறுகளை ஆராய மாநகராட்சி திட்டம்
Updated on
1 min read

சென்னை: நேப்பியர் பாலம் முதல் செல்ஃபி பாயின்ட் வரை மெரினா கடற்கரையில் 3 கி.மீ தூரத்துக்கு ரோப் கார் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றுன. இத்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய யோசனைகளை தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்களுக்கான பயிற்சி கூட்டங்களில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், கவுன்சிலர்களும் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தனர். இதில், மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் செல்ஃபி பாயின்ட் வரை 3 கி.மீ. தூரத்துக்கு ரோப் கார் அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ரோப் கார் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை தொடங்க கவுன்சிலர்கள் யோசனை தெரிவித்தனர்.

இதற்கான கட்டமைப்பை மெரினா கடற்கரையில் ஏற்படுத்த முடியுமா?, ரோப் கார் சேவை கொண்டு வந்தால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்குமா என்பன உள்ளிட்ட சாத்தியக்கூறுகளை ஆராய திட்டமிட்டுள்ளோம்.

சென்னை மாநகராட்சியின் பொறியாளர்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட உள்ளனர். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ரோப் கார் தொடங்குவதற்கான சூழல் இருந்தால் தமிழக அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில், அடுத்த கட்டமாக நேப்பியர் பாலம் முதல் ராயபுரம் வரையிலும், அடையாறு ஆற்றின் குறுக்கேயும் ரோப்கார் அமைக்க கவுன்சிலர்கள் யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in