Published : 03 Jul 2022 05:37 PM
Last Updated : 03 Jul 2022 05:37 PM

ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்கினால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் ஸ்டாலின் 

நாமக்கல்:" உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நடந்துகொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக நான் எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. பொம்மை குட்டைமேடு என்ற பகுதியில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: " பள்ளிப்படிப்பைவிட அரசியல் படிப்புதான் எனக்கு அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்தியது. அரசியல் ஆர்வம் என்பது பதவிக்கு வரவேண்டும், மாலை மரியாதை வரவேண்டும் என்பதற்காக அல்ல. மக்கள் பணியாற்ற வேண்டும், இந்த நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அந்த முடிவுக்கு வந்தேன்.

ஒரு கொள்கைக்காக லட்சியத்துக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது, பதவிகள் அல்ல, பாராட்டுகள் அல்ல, மலர் மாலைகள் அல்ல சிறைச்சாலைகள்தான் எனக்கு கிடைத்தது. சித்ரவதைகளைத்தான் நான் அனுபவித்தேன். துன்ப துயரங்கள் என்னை வரவேற்றது. திருமணமான ஐந்தே மாதத்தில் மனைவியை பிரிந்து மிசா கைதியாக சிறையில் அடைக்கப்பட்டேன். கட்சியே வேண்டாம், அரசியலே வேண்டாம் என்று எழுதிகொடுத்துவிட்டு சென்றவர்கள் பலர் உண்டு. திமுகவிலிருந்து விலகி கொள்கிறேன் என்று எழுதிகொடுத்தால், சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவதாக அப்போது கூறப்பட்டது. அப்படி எழுதி கொடுக்க மறுத்தவன் நான். மற்றவர்கள் அவ்வாறு எழுதிகொடுக்கக்கூடாது என்றும் சொன்னவன் நான்.

சிறையில் இருந்து 1977-ல் வெளியே வந்தேன். சட்டமன்றத்துக்குள் முதன்முதலாக சென்றது 1989-ம் ஆண்டு. மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்குள் செல்ல 12 ஆண்டு காலம் பிடித்தது. இதை எதற்காக கூறுகிறேன் என்றால், பொறுப்புகள் உடனடியாக கிடைத்துவிடாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டும்.

கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மாபெரும் பேரியக்கம் திமுக. இங்கு பொறுப்புகள் என்பது சில ஆயிரும் பேருக்குத்தான் கிடைக்கும். கட்சிக்காக வாழ்நாள் எல்லாம் உழைத்து கடைசிவரை பொறுப்புகள் கிடைக்காமல் மறைந்துபோனவர்கள் உண்டு.இதற்கு மாறாக நீங்கள் ஒரு பொறுப்பை அடைந்திருக்கிறீர்கள். ஒரு பொறுப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது என்றால் அதை போற்றி, பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்குத்தான் உண்டு.

அப்படி கிடைக்கும் பொறுப்பை நாம் எப்படி பாதுகாக்கிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிகமிக முக்கியம். பதவிகளுக்கோ, பொறுப்புகளுக்கோ வருவது முக்கியமல்ல. அதனை தக்கவைத்துக் கொள்வதுதான் முக்கியம். உங்கள் அனைவருக்கும் இதைதான் சொல்ல விரும்புகிறேன். பொறுப்புக்கு வந்துள்ள நீங்கள் பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான சக்தியை மக்களுக்காக மட்டும் நீங்கள் பயன்படுத்துங்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் ஓராண்டு காலத்தில் நான் இட்ட கையெழுத்துகள் தமிழ்நாட்டு மக்களிடம் ஒளியை உருவாக்கியிருக்கிறது, இருளை போக்கியிருக்கிறது. கவலையைப் போக்கி, கண்ணீரை கரைத்திருக்கிறது. நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் அனைத்திலும் சிரமமானது. 50 ஆண்டுகளாக மக்களை நான் சந்தித்து வருகிறேன். மக்கள் மனதில் இருப்பதை அவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். நம்மை நோக்கி மலர்ச்சியுடன், மகிழ்ச்சியுடன் வந்தால்தான் அது நேர்மறையான வெளிப்பாடும். இந்த மனோபாவத்தை மக்களிடமிருந்து நீங்கள் பெறவேண்டும்.

மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து அவர்களுக்கு சேவை செய்தால், நிச்சயம் உங்களை நோக்கி மக்கள் வரத்தான் செய்வார்கள். அதேநேரத்தில் நீங்கள் தவறு செய்துவிட்டால், உங்களைவிட்டு மக்கள் விலகுவார்கள். விலகுவதோடு மட்டுமல்ல, உங்களை புறக்கணிப்பார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமே இதுதான். புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு பயமோ, தயக்கமோ, கூச்சமோ இருக்கக்கூடாது. தரப்பட்ட பொறுப்புகளை நேரடியாக நீங்களே கையாள வேண்டும். உங்களுக்கு தரப்பட்ட பொறுப்பை உங்கள் கணவரிடத்தில் நீங்கள் ஒப்படைத்துவிடாதீர்கள். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கு அஞ்சாத நெறி கொண்டவர்களாக நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக நான் எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்க தாம்பூலத்தில் வைத்து இந்த ஆட்சியை நமக்கு தந்துவிடவில்லை. 50 ஆண்டு காலமாக உழைத்த உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான திமுக தொண்டர்களின் தன்னமலற்ற உழைப்பால் கிடைத்த பலன் இது. என்னை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த கட்சியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கோடிக்கணக்கான தமிழக மக்கள் என்னை நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x