Published : 03 Jul 2022 03:50 PM
Last Updated : 03 Jul 2022 03:50 PM

வேலை உறுதியளிப்புத் திட்ட வேலைநாட்கள் 200ஆக உயர்த்த வேண்டும்; ராகுல் கருத்தை வரவேற்கிறோம்: முத்தரசன்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட வேலைநாட்கள் 200ஆக உயர்த்தவேண்டுமென்ற ராகுல் கருத்தை வரவேற்கிறோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்கள் ஆண்டுக்கு நூறு நாளாக இருப்பதை 200 ஆக உயர்த்த வேண்டும் என கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கு நூறு நாள் வேலை என்பது கால வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு தக்கபடி மாற்றியமைக்க வேண்டும் என்பதை விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கிராமப் புறங்களில் உள்ள உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத் திட்டமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை பாஜக ஒன்றிய அரசு ஆண்டுக்கு, ஆண்டு குறைத்து, திட்டத்தை சிதைத்து வருகிறது.

இந்த நிலையில் திட்டத்தை வலிமைப் படுத்தி, விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வேலை உறுதியளிப்புத் திட்ட வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி, குறைந்த பட்ச ஊதியம் ரூ.400 வழங்க வேண்டும் என்று கூறியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.'' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x