

டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதை அறியாமல் காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளுக்கு வந்தவர்கள், பகல் 12 மணி வரை காத்திருந்து மது வாங்கினர்.
தமிழக முதல்வராக 6-வது முறை பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, பதவியேற்ற முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் பகல் 12 மணியாக மாற்றப்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த நேரக் குறைப்பு உத்தரவு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நேற்று பகல் 12 மணிக்குதான் திறக்கப்பட்டன. இதை அறியாத சிலர், காலை 10 மணிக்கே டாஸ் மாக் கடைகளுக்கு சென்றனர். கடை திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை காலை 10 முதல் 12 மணி வரை குறைவாகத்தான் இருக்கும். தின மும் குடிப்பவர்கள், குடி நோயா ளிகள் மட்டுமே அந்த நேரத்தில் குடிப்பார்கள். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு காலை 10 மணிக்கு வந்த சிலர், ஷட்டர் அருகிலேயே அமர்ந்து காத்திருந்தனர்.
பகல் 12 மணிக்கு கடை திறந்ததும் மது வாங்கிச் சென்றனர். வழக்கத்தை விட நேற்று மதியம் 12 முதல் 2 மணி வரை விற்பனை அதிகமாக இருந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, மூடப்படவுள்ள 500 கடைகளை கண்டறியும் பணிகளில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருவாய் குறை வாக உள்ள கடைகள், கோயில், பள்ளிக்கு அருகில் உள்ள கடை கள், நெடுஞ்சாலையோர கடைகள், ஒரே இடத்தில் அருகருகே உள்ள கடைகள் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
டாஸ்மாக் மண்டல அதிகாரிகள் பரிந்துரையின்பேரில் சில கடைகள் தற்போதே மூடப்பட்டுள்ளன. 500 கடைகளும் விரைவில் மூடப்படும் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகள் காலை 10 மணிக்குதிறக்காவிட்டாலும், சில இடங்களில் பார்களில் மது விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.