Published : 03 Jul 2022 06:15 AM
Last Updated : 03 Jul 2022 06:15 AM

ஓராண்டு சாதனை மன நிறைவு தருகிறது - கரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கரூர் திருமாநிலையூரில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெண் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான வேலைக்கான ஆணையை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர்.

கரூர்/நாமக்கல்: தமிழகத்தில் ஓராண்டு காலத்தில் செய்திருக்கும் சாதனைகளை பார்க்கும்போது மன நிறைவை தருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் திருமாநிலையூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். விழாவில், ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை திறந்துவைத்தும், ரூ.581.44 கோடியிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.500.83 கோடி மதிப்பில் 80,750 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியை காட்சிப்படுத்த பெருங்காட்சி அரங்க வளாகம், ஜவுளி உற்பத்தி தரத்தை தொழில்நுட்ப பரிசோதனை செய்ய சர்வதேச ஜவுளி பரிசோதனை நிலையம், கரூர் திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் புதிய பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்படும்.

தமிழகத்தில் இந்த ஓராண்டு காலத்தில் கரூர் மாவட்டத்தில் செய்திருக்கும் சாதனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் பார்க்கும்போது மனநிறைவை தருகிறது. மக்கள் மனங்களிலும் இதுதான் இருக்கிறது என்பது அவர்களது முகங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.

வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. மானத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுடன் போராடலாம். மானத்தைப் பற்றி கவலைப்படாதவர்களிடம் போராட முடியாது. ஆட்சியை பற்றி வீண் விமர்சனம் செய்பவர்களிடம் கேட்காமல், அரசால் பயனடைந்த பயனாளிகளிடம் கேளுங்கள்.

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வீடுகளில் விளக்காக, அவர்கள் விளக்கேற்ற காரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் எனக்கு முதல்வர் பொறுப்பை வழங்கி உள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். மக்களின் நியாயமான கோரிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம். நான் நினைப்பது மட்டும்தான் நடக்கவேண்டும் என நினைப்பவன் நானல்ல.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி, கொசு வலை உற்பத்தி, பேருந்து கூண்டுகட்டும் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. இதில், முக்கிய ஏற்றுமதி தொழிலாக ஜவுளித்தொழில் உள்ளது. இது மேலும் வளர வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு இணையாக வளரவேண்டும். மாவட்டங்களுக்கு இடையே இத்தகைய ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். மாவட்டங்கள் வளர்ந்தால் தான் மாநிலம் வளரும் என்றார்.

முன்னதாக மேடைக்கு வரும்முன் விழாவில் பங்கேற்ற பெண்களை சந்தித்துப் பேசியதுடன் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக, கரூர் சுற்றுலா மாளிகையில் விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி ஜோதிமணி, மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் குளித்தலை ரா.மாணிக்கம், கிருஷ்ண ராயபுரம் க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் பேசினர். ஆட்சியர் த.பிரபு சங்கர் வரவேற்றார். வருவாய் அலுவலர் ம.லியாகத் நன்றி கூறினார்.

நாமக்கல் மாநாடு

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் புறப்பட்டு சென்றார். நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில் இன்று நடைபெறும் திமுக, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x