

திருப்பூரில் கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி தொகையானது அரசியல் பேர பணமாக இருக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, அவர்கள் கணக்குப் படி ரூ.570 கோடி குறித்த மிகக் கடுமையான ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுடன், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வகைகளில் முயன்று அரசியல் பேரம் பேசுகிறார் என்பது மிக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு இந்த மோசடிக்குத் துணை போனால், உண்மை விசுவரூபம் எடுத்து வெளியே வரும். எனவே, இன்னும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கண்டெய்னர்களில் இருக்கும் பணத்தை எண்ணும்போது, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்தான் பணம் எண்ணப்பட வேண்டும்.
அண்ணா திமுக ஊழல் அம்பலத்துக்கு வந்துவிட்டதால், திமுக ஊழல் பிரச்சினையில் தப்பிவிட்டதாக எவரும் எண்ண வேண்டாம். ஒரு இலட்சத்து எழுபத்து ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டுமின்றி, கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையிலும் திமுக கற்பனை செய்ய முடியாத கோடிகள் ஊழலில் கொள்ளையடித்ததை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
திமுகவினரும், அண்ணா திமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் அரவக்குறிச்சி தொகுதி.
கடந்த 14-ம் தேதி மாலை முதல் இன்று காலை வரை பணம் கொடுக்கப்பட்டது. ஒப்புக்காக சில இடங்களில் பறக்கும் படை சோதனையிட்டபோது, கண்டுபிடிக்கப்பட்ட பணத்தைத் தவிர, ராஜேஷ் லக்கானி ஒட்டுமொத்தமாக பணம் கொடுப்பதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மையான ஜனநாயகம் வெல்லுமா என்பது மே 19-ம் தேதி தான் தெரிய வரும். பண வெள்ளத்தை எதிர்த்து தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி -தமிழ் மாநிலக் காங்கிரஸ் இணைந்து அமைத்த மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி ஜனநாயகத்தைக் காத்து வெற்றி பெரும் என நம்புகிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.