

தொடர் போராட்டத்தின் எதிரொலியாக திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலிருந்த 16 இலங்கைத் தமிழர்கள் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் 104 இலங்கைத் தமிழர்கள் மற்றும் பங்களாதேஷ், உகாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என 143 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் உடனடியாக சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் பலர், அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உமாரமணன்(41) என்ற இலங்கைத் தமிழர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். அதேபோல செல்வம், விஜயகுமார், தேவேந்திரன், யோகசந்திரன், ஜெயரத்தினம் உள்ளிட்ட 19 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து 20 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற மறுத்து, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர்.
இதற்கிடையே, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஜூன் 28-ம் தேதி சிறப்பு முகாமுக்கு வந்து இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதுதொடர்பாக அரசிடம் பேசி உரிய பதில் அளிப்பதாக ஜெசிந்தா லாசரஸ் கூறிச் சென்றார்.
அதனடிப்படையில் மறுவாழ்வு முகாம் அல்லது வீட்டிலிருந்தபடி நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், மறுவாழ்வு முகாம் விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளின்கீழ் சிறப்பு முகாமில் இருந்த 16 பேரை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 11 பேர் ராணிப்பேட்டை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடியவர்கள். 5 பேர் முகாமில் பதிவுபெற்று, வெளி இடங்களில் வசிக்கக்கூடியவர்கள்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்று சிறப்பு முகாமுக்குச் சென்று 16 பேரையும் சந்தித்து அறிவுரைகள் கூறி வழியனுப்பி வைத்தனர். அப்போது மாநகர காவல் துணை ஆணையர் தேவி, சிறப்பு முகாம் துணை ஆட்சியர் ஜமுனாராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.